நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.

Update: 2019-05-20 00:00 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது.

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து இருக்கிறது. கடைசி மற்றும் 7-வது கட்டமாக நேற்று உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முடிவுகள் வெளியாகும் போது தான் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது உறுதியாக தெரிய வரும்.

மத்தியில் ஆட்சி அமைக்க தனிப்பட்ட முறையில் ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 336 தொகுதிகளை கைப்பற்றியது. தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற்ற பாரதீய ஜனதா, தனது கூட்டணி கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு மோடி தலைமையில் புதிய அரசை அமைத்தது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 60 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. இதில் காங்கிரசுக்கு மட்டும் 44 இடங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், நேற்றுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, ஓட்டுப்போட்டுவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு பற்றிய முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 306 இடங்கள் கிடைக்கும் என்றும், இதில் தனிப்பட்ட முறையில் பாரதீய ஜனதா 262 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 78 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பிற கட்சிகளுக்கு 104 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜன்கிபாத் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 305 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 124 இடங்களும், பிற கட்சிகளுக்கு 113 இடங்களும் கிடைக்கும் என்றும், சி-ஓட்டர் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 287 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 128 இடங்களும், பிற கட்சிகளுக்கு 127 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

இந்தியா டூடே-சாணக்கியா சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 340 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்களும், பிற கட்சிகளுக்கு 104 இடங்களும் கிடைக்கும் என்றும், நியூஸ் நேஷன் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 282 முதல் 290 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 118 முதல் 126 இடங்களும், பிற கட்சிகளுக்கு 130 முதல் 138 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்து உள்ளது.

‘போல் ஆப் போல்ஸ்’ சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 317 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்களும், பிற கட்சிகளுக்கு 115 இடங்களும் கிடைக்கும் என்றும், சுதர்சன் நியூஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 313 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 121 இடங்களும், பிற கட்சிகளுக்கு 109 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

நியூஸ் எக்ஸ் நேட்டா சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் எந்த கட்சிக்குகோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை பலம் கிடைக் காது என்று தெரியவந்து உள்ளது. இதன் கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 242 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 164 இடங் களும், பிற கட்சிகளுக்கு 137 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்து இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரியை பொறுத்தமட்டில் தேர்தல் நடந்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவுக்கு பின்னர் தந்தி டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 19 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்றும், 14 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 29 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களும் கிடைக்கும் என்றும், இந்தியா டூடே-ஆக்சிஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து இருக்கிறது.

என்.டி.டி.வி. சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 25 இடங் களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைக்கும் என்றும், சி.என்.என். நியூஸ்-18 சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிய வந்து உள்ளது.

மேலும் செய்திகள்