ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்களின் பணி நீக்க ஆணையைத் திரும்ப பெறுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-09 15:55 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு ஏர் இந்தியா மற்றும் அதன் அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை வாங்கியது. இதுதவிர, ஏஐஎக்ஸ் கனெக்ட் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களும் டாடா குழுமம் வசம் உள்ளன.

இந்நிலையில், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைத்து ஒரு நிறுவனமாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் நிறுவனத்தை இணைத்து ஒரு நிறுவனமாகவும் மாற்றும் நடவடிக்கையை டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது இல்லை என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நிர்வாகத்திடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் ஒரே நேரத்தில், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் தெரிவித்துவிட்டு விடுப்பு எடுத்தனர். தங்கள் செல்போன்களையும் சுவிட்ச் ஆப் செய்தனர். கடைசி நேரத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையங்களில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. உடனடியாக அதன் ஊழியர்கள் 25 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்தது.

இந்தநிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களிடம் நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களில் ஒரு பகுதியினர் வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர். நிர்வாகத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்களின் பணி நீக்க ஆணையைத் திரும்ப பெறுவதாகவும் நிர்வாகம் தெரிவித்ததாக பிடிஐ குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்