சத்தீஷ்காரில் 12 பெண்கள் உள்பட 41 நக்சல்கள் சரண்

மறுவாழ்வு கொள்கையின் கீழ், ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் உடனடி நிதி உதவி வழங்கப்பட்டது.;

Update:2025-11-26 20:25 IST

பிஜாப்பூர்,

அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், நக்சலைட்டுகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதை தொடர்ந்து மாநில அரசு உதவிகளுடன் மத்திய அரசு நக்சலைட்டுகளுக்கு எதிராக பலவேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து அண்மைக்காலமாக மாநில அரசின் மறுவாழ்வு கொள்கைகளை ஏற்று ஆயுதங்களை கைவிட்டு நக்சலைட்டுகள் சரண் அடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் பிஜாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் இன்று 12 பெண்கள் உள்பட 41 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். அவர்கள் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, ஜனநாயக கட்டமைப்பில் கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதாக உறுதி அளித்துள்ளனர். மறுவாழ்வு கொள்கையின் கீழ், ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் உடனடி நிதி உதவி வழங்கப்பட்டது.

சரண் அடைந்தவர்களில் 8 பேர் தலைக்கு தலா ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம், 12 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் 8 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

நாராயண்பூர் மாவட்டத்தில் நேற்று 28 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். அவர்களில் 19 பேர் பெண்கள் ஆவர். சரண் அடைந்த நக்சலைட்டுகளில் 22 பேரின் தலைக்கு மொத்தமாக ரூ.89 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு முதல் மொத்தம் 790 நச்சலைட்டுகள் வன்முறையை கைவிட்டு பிஜாப்பூர் மாவட்டத்தில் சரணடைந்து உள்ளனர். இதே காலகட்டத்தில் இந்த மாவட்டத்தில் தனித்தனி என்கவுன்ட்டர்களில் 202 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். 1,031 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளில் சத்தீஷ்காரில் 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் சரண் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்