பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதா? கருத்தாய்வில் புதிய தகவல்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதா? என்பது பற்றிய கருத்தாய்வில் புதிய தகவல்கள் தெரிய வந்து இருக்கிறது. கருத்தாய்வு மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து, பொருளாதார நிபுணர்கள், வர்த்தக பிரமுகர்கள், பொ

Update: 2017-01-08 21:59 GMT

புதுடெல்லி,

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதா? என்பது பற்றிய கருத்தாய்வில் புதிய தகவல்கள் தெரிய வந்து இருக்கிறது.

கருத்தாய்வு

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து, பொருளாதார நிபுணர்கள், வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் டெல்லியை சேர்ந்த பி.எச்.டி. தொழில் வர்த்தக சபையின் ஆராய்ச்சி பிரிவு கேள்வித்தாளை தயாரித்து அதை பல்வேறு தரப்பினரிடம் அளித்து கருத்தாய்வு நடத்தியது.

அதில், 81 சதவீத பொருளாதார நிபுணர்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குறுகிய காலத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரம் பண மதிப்பு நீக்கத்தால் நீண்ட காலத்திற்கு பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க முடியும் என்று தெரிவித்தனர்.

கையில் பணமின்றி அவதி

வர்த்தக துறையில் 73 சதவீதம் பேர் கடும் பணத்தட்டுப்பாட்டை எதிர்கொண்டதாகவும், தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்களின் பணத்தேவையை நிறைவேற்ற முடியவில்லை எனவும் குறிப்பிட்டனர். உற்பத்தி துறையினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

பணப்புழக்கம் அதிகம் உள்ள பழங்கள், காய்கறி சந்தை, விவசாயம், உணவு பதப்படுத்துதல், கட்டுமான பணிகள் சார்ந்த துறையினர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

மக்கள் பிரிவில் உணவு பொருட்கள், தின்பண்டங்கள், பால் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கையில் பணமின்றி அவதிப்பட்டதாக 92 சதவீதம் பேரும், 58 சதவீதம் பேர் பணம் கிடைக்காமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளானதாகவும் கூறினர். ஏ.டி.எம்.களிலும், வங்கிகளிலும் பணம் எடுக்க முடியாததால் பாதிக்கப்பட்டதாக 89 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.

வளர்ச்சி வேகம் பிடிக்கும்

கருத்தாய்வை நடத்திய பி.எச்.டி. தொழில் வர்த்தக சபையின் தலைவர் கோபால் ஜீவராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பண மதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் அகற்றப்பட்டு இருக்கிறது. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. பண வீக்க எதிர்பார்ப்பும் அதிகம் இருக்காது. நேரடி வரிவிதிப்பின் தாக்கம் குறையும். பண மதிப்பு நீக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டாலும் அது குறுகிய காலத்திற்குத்தான் இருக்கும். இந்த கால கட்டம் முடிந்த பிறகு நாட்டின் வளர்ச்சி வேகம் பிடிக்கும்’’ என்றார்.

மேலும் செய்திகள்