நடப்பு கணக்கில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பும் உயர்வு: ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம்

ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் எடுக்கலாம் என்றும், வங்கி நடப்பு கணக்குதாரர்கள் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் எடுக்கலாம் என்பது ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2017-01-17 00:15 GMT
புதுடெல்லி,

ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் எடுக்கலாம் என்றும், வங்கி நடப்பு கணக்குதாரர்கள் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் எடுக்கலாம் என்பது ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பணத்தட்டுப்பாடு

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இறுதியாக இருந்த நிலவரப்படி ஏ.டி.எம்.களில் ஒரு அட்டைக்கு ஒரு நாளைக்கு ரூ.4,500 மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் வங்கிகளில் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.

இதனால் பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏ.டி.எம்.களும் முழுமையாக இயங்கவில்லை, பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பூட்டியே இருந்தன. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி நேற்று இந்த கட்டுப்பாடுகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.

ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏ.டி.எம்.களில் ஒரு அட்டைக்கு தினமும் ரூ.4,500 எடுக்கலாம் என்பது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அவர்கள் வாரத்திற்கு பணம் எடுப்பதற்கான ரூ.24 ஆயிரம் உச்சவரம்புக்குள் இந்த பயன்பாடு இருக்கும்.

வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் எடுக்கலாம் என்று இருப்பது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

சிரமம் குறையும்

அதே சமயம் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு எடுப்பதற்கான தொகையில் (ரூ.24 ஆயிரம்) மாற்றம் எதுவும் இல்லை. இதன்மூலம் அவர்கள் ஏ.டி.எம்.மில் வாரத்தில் 2 நாட்களுக்கு தான் ரூ.10 ஆயிரம் எடுக்க முடியும். 3-வது நாளில் ரூ.4 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பு மூலம் இனி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பவர்களின் சிரமங்கள் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்