உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி என்.டி.திவாரி பா.ஜனதாவில் இணைந்தார்

என்.டி.திவாரி என பிரபலமாக அறியப்படும் இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் 3 முறையும், உத்தரகாண்டில் ஒரு முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

Update: 2017-01-18 22:46 GMT
புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல காங்கிரஸ் தலைவர், நாராயண் தத் திவாரி. என்.டி.திவாரி என பிரபலமாக அறியப்படும் இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் 3 முறையும், உத்தரகாண்டில் ஒரு முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் மத்திய அரசுகளிலும் பல்வேறு துறைகளில் மந்திரி பதவி வகித்துள்ள இவர், ஆந்திராவின் கவர்னராகவும் இருந்தார்.

91 வயதான என்.டி.திவாரி தனது மகன் ரோகித் சேகருடன் நேற்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார். உத்தரகாண்டில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், என்.டி.திவாரி பா.ஜனதாவில் இணைந்திருப்பது காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்.டி.திவாரி பா.ஜனதாவில் இணைந்திருப்பதன் மூலம், வருகிற தேர்தலில் அவரது சொந்த பகுதியான குமாயுன் மண்டலத்தில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்த தேர்தலில் திவாரியின் மகன் ரோகித் சேகருக்கு பா.ஜனதா சார்பில் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்