பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு கணக்கில் காட்டாத வருவாய் ரூ.5,400 கோடி சிக்கியது

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு கணக்கில் காட்டாத வருவாய் ரூ.5,400 கோடி சிக்கி உள்ளது.

Update: 2017-02-03 23:30 GMT
புதுடெல்லி,

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு கணக்கில் காட்டாத வருவாய் ரூ.5,400 கோடி சிக்கி உள்ளது என்று பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான மசோதாவை பாராளுமன்றத்தில் நிதிமந்திரி அருண்ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே எம்.பி.க்களின் எழுத்துப்பூர்வ கேள்விகளுக்கு அருண்ஜெட்லி பதில் அளித்து கூறியதாவது:-

ரூ.5,400 கோடி சிக்கியது

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, அதாவது நவம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 10-ந்தேதி வரை நாடு முழுவதும் 1,100 வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. சந்தேகத்துக்கு இடமான அளவில் வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் மீது 5,100 நோட்டீஸ்களை வருமான வரித்துறை அனுப்பி இருக்கிறது.

தற்போது நடந்து வரும் விசாரணையில் ஜனவரி மாதம் 10-ந்தேதி வரை ரூ.5,400 கோடிக்கு கணக்கில் காட்டாத வருவாய் சிக்கி உள்ளது.

பண மதிப்பு நீக்கம் ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டுகள், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி ஆகியவற்றை ஒழிப்பதன் மீதான நடவடிக்கைகளின் ஒரு பகுதி ஆகும்.

கருப்பு பண ஒழிப்பு

இது தொடர்பாக தேவையான தகவல்களை பெறுவதற்கும், விசாரணை, சோதனைகள், ஆய்வுகள், வருவாய் மதிப்பீடு செய்வதற்கும், அபராதம் மற்றும் குற்ற நடைமுறைகளை தொடருவதற்கும் அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கருப்பு பணத்தை ஒழிக்க சிறப்பு விசாரணை குழு, சட்ட அமலாக்கம், பினாமி சொத்து தடைச்சட்டம் திருத்தம் ஆகியவையும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்னொரு கேள்விக்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் கங்குவார் கூறும்போது “பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, பழைய ரூ.500, 1,000 நோட்டுகள் டெபாசிட்களாக ரூ.12.44 லட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி இருக்கிறது” என்றார். 

மேலும் செய்திகள்