சம்பளத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வகை செய்யும் ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

தொழிலாளர்களுக்கான அனைத்து விதமான ஊதியத்தை நாணயம், ரூபாய் நோட்டுகள் அல்லது இரண்டு முறையிலுமாக வழங்கப்பட வேண்டும்.

Update: 2017-02-17 21:22 GMT
புதுடெல்லி,

இந்திய ஊதிய செலுத்துச்சட்டம் 1936-ன் படி தொழிலாளர்களுக்கான அனைத்து விதமான ஊதியத்தை நாணயம், ரூபாய் நோட்டுகள் அல்லது இரண்டு முறையிலுமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் அமல்படுத்திய மத்திய அரசு, தற்போது ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது.

அதன்படி தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கும் நடைமுறையிலும் மாற்றம் கொண்டுவருமாறு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஊதியத்தை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்துதல், காசோலையாக வழங்குதல் மற்றும் எலக்ட்ரானிக் முறைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன.

இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பின்னர் சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற பட்ஜெட் தொடரின் முதற்கட்ட கூட்டத்தில் இதற்கான திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா கடந்த 7-ந்தேதி பாராளுமன்றத்திலும், 8-ந்தேதி மேல்-சபையிலும் நிறைவேறியது.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்காக அந்த சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான ஊதியத்தை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தவும், காசோலை, எலக்ட்ரானிக் முறை போன்றவற்றை பயன்படுத்தவும் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்த முடியும். 

மேலும் செய்திகள்