உத்தரபிரதேச மந்திரி மீது கற்பழிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் மந்திரிசபையில் சுரங்கத்துறை மந்திரி பதவி வகிப்பவர் காயத்ரி பிரஜாபதி.

Update: 2017-02-17 22:15 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் மந்திரிசபையில் சுரங்கத்துறை மந்திரி பதவி வகிப்பவர் காயத்ரி பிரஜாபதி. இவர் 35 வயதான ஒரு பெண்ணை 3 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தபோது கற்பழித்ததுடன் ஆபாசப்படங்கள் எடுத்து, அவற்றை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி 2 ஆண்டுகளாக கற்பழித்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவருடன் வேறு சிலரும் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அர்ஜன் குமார் சிக்ரி, ஆர்.கே.அகர்வால் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் சார்பில் வக்கீல் மக்மூது பிரச்சா ஆஜராகி வாதாடினார். அதைத் தொடர்ந்து இது தொடர்பாக மந்திரி காயத்ரி பிரஜாபதி உள்ளிட்டவர்கள் மீது கும்பல் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரபிரதேச மாநில போலீசாருக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான நிலவர அறிக்கையை 8 வாரங்களில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து மந்திரி காயத்ரி பிரஜாபதி உள்ளிட்டவர்கள் மீது உத்தரபிரதேச மாநில போலீசார் கும்பல் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 

மேலும் செய்திகள்