”சத்ரபதி சிவாஜி நம் நாட்டில் பிறந்ததை எண்ணி பெருமையடைய வேண்டும்”டுவிட்டரில் மோடி வாழ்த்து

”சத்ரபதி வீரசிவாஜி நம் நாட்டில் பிறந்ததை எண்ணி பெருமை அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளார்.

Update: 2017-02-19 10:07 GMT
புதுடெல்லி,

மராட்டிய பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இளம் வயதிலேயே திறமை பெற்ற போர் வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், வல்லமை பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர்.ராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டிய பேரரசு விரிவடைய வித்திட்டவர்.

மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்கிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழை உலகறிய செய்யும் வகையில் மராட்டிய அரசு மும்பை அரபிக்கடலில் அவருக்கு மிக உயரமான சிலை மற்றும் நினைவு மண்டபம் நிறுவ உள்ளது. இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை காட்டிலும் உயரமானதாக நிறுவப்பட இருக்கிறது.  சத்ரபதி சிவாஜி நினைவு தினத்தை முன்னிட்டு மும்பை அரபிக் கடலில் ரூ.3600 கோடியில் பிரமாண்ட சிலையுடன் கூடிய நினைவிடம் அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி டிசம்பர் 24, 2016-ல் துவக்கி வைத்தார். 

சத்ரபதி வீர சிவாஜியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மகாராஜா சிவாஜியின் கொள்கைகளை நிறைவேற்ற ஒவ்வொரு இந்தியரும் அயராது உழைக்க வேண்டும். யாருக்கும் அஞ்சாத பேராண்மையுடைய வீரசிவாஜி நம் நாட்டில் பிறந்ததை எண்ணி பெருமையடைய வேண்டும். சத்ரபதி சிவாஜி பிறந்த நாளையொட்டி அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர். நிதி நிர்வாக திறமையும் பெற்று இருந்தார். 

நான் சமீபத்தில் மும்பை அரபிக் கடலில் சத்ரபதி வீர சிவாஜியின் பிரமாண்ட சிலையுடன் கூடிய நினைவிடம் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததில் சந்தோஷமக கருதுகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்