பஞ்சாப் முதல்–மந்திரியாக அமரிந்தர் சிங் தேர்வு 16–ந் தேதி பதவி ஏற்கிறார்
பஞ்சாப் முதல்–மந்திரியாக அமரிந்தர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 16–ந் தேதி பதவி ஏற்கிறார்.;
சண்டிகார்
பஞ்சாப் முதல்–மந்திரியாக அமரிந்தர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 16–ந் தேதி பதவி ஏற்கிறார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்5 மாநில சட்டசபை தேர்தல்களில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, சட்டசபை காங்கிரஸ் தலைவரை (முதல்–மந்திரி) தேர்ந்தெடுக்க புதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று சண்டிகாரில் நடைபெற்றது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஆஷா குமாரி, காங்கிரஸ் தேர்வுக்குழு தலைவர் அசோக் கெலாட், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஹரிஷ் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், சட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, இத்தகவலை ராகுல் காந்தியிடம் ஆஷா குமாரி தொலைபேசியில் தெரிவித்தார். பின்னர், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான கேப்டன் அமரிந்தர் சிங்கை தேர்வு செய்யுமாறு ராகுல் காந்தி கூறியதாக எம்.எல்.ஏ.க்களிடம் ஆஷா குமாரி தெரிவித்தார்.
தேர்வுஅதைத் தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவராக அமரிந்தர் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், ஆஷா குமாரி உள்ளிட்ட மேலிட பிரதிநிதிகளுடன் அமரிந்தர் சிங் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் வி.பி.சிங் பட்னோரை சந்தித்தார். தான், சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தெரிவித்து, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு அமைக்குமாறு அமரிந்தர் சிங்குக்கு அழைப்பு விடுத்தார்.
16–ந் தேதி பதவி ஏற்புகவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த அமரிந்தர் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பஞ்சாப் புதிய முதல்–மந்திரியாக 16–ந் தேதி காலை 10 மணிக்கு நான் பதவி ஏற்கிறேன். என்னுடன் சில மந்திரிகளும் பதவி ஏற்பார்கள். 14–ந் தேதி நான் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து, புதிய அரசு அமைப்பது பற்றி விவாதிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.