சிபிஐ அதிகாரிபோல் நடித்து ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளியை கைது செய்த போலீசார்

ராகேசிடம் நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.;

Update:2025-12-20 20:17 IST

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த ராகேஷிடம் சிபிஐ அதிகாரி என ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மேலும், ராகேஷிடம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் தொடர்பாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ராகேசை மிரட்டியுள்ளார்.

மேலும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும், வங்கி கணக்கு சரிபார்க்கவும் ரூ. 30 லட்சம் பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யும்படியும் சைபர் குற்றவாளி மிரட்டியுள்ளார். மேலும், ராகேசிடம் நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய ராகேஷ் சைபர் குற்றவாளி கூறிய வங்கிக்கணக்கில் ரூ. 30 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர், தான் டிஜிட்டல் கைது முறையால் ஏமாற்றப்பட்டதையும் தனது பணம் ரூ. 30 லட்சத்தை பறிகொடுத்ததையும் உணர்ந்த ராகேஷ் உடனடியாக ஜார்க்கண்ட் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், தேசிய சைபர் கிரைம் உதவியுடன் ராகேசிடம் ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய சைபர் குற்றவாளி குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த யோகேஷ் சிங் சிசோடியா என்ற நபர் இந்த சைபர் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஜெய்ப்பூர் சென்ற ஜார்க்கண்ட் போலீசார் சைபர் குற்றவாளி யோகேஷ் சிங்கை கைது செய்து ராஞ்சி அழைத்து வந்தனர். யோகேஷ் சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பயன்படுத்திய வங்கி கணக்கு மூலம் ஒடிசா, மராட்டியம், கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 10க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து யோகேஷ் சிங்கை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்