பதன்கோட் விமானப்படை தளத்தில் அதிஉயர் உஷார் நிலையில் பாதுகாப்பு படை நிறுத்தம்

பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் பாதுகாப்பு படை அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2017-03-14 13:41 GMT

பதன்கோட், 

பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த வருடம் ஜனவரி 2–ந் தேதி ஊடுருவினர். தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தினர். நமது பாதுகாப்பு படையினர் தீரமுடன் பதிலடி கொடுத்து, 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இருப்பினும், இந்த தாக்குதலின்போது, நமது பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தது நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியது. பதன்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதலானது, பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களை இந்தியா ஒப்படைத்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படை மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ஏற்கனவே தாக்குதலுக்கு இலக்கான பதன்கோட் விமானப்படை தளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை எழுந்ததை தொடர்ந்து பதன்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு படை அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. பதன்கோட் விமானப்படை தளத்திற்கு மேற் பகுதியில் ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. அங்கு தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. பதன்கோட் பிராந்திய எஸ்.எஸ்.பி. நிலாம்ப்ரி விஜய் பேசுகையில், “தேசவிரோத சக்திகள் மையம் கொண்டு உள்ளன என எங்களுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்து உள்ளது, எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து உள்ளோம்,” என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்