பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. கோரிக்கை

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. கோரிக்கை

Update: 2017-03-14 21:46 GMT
புதுடெல்லி,

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

மரணத்தில் சந்தேகம்

பாராளுமன்றத்தில் நேற்று இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி. பி.ஆர்.சுந்தரம் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 75 நாட்களும் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற தெளிவான தகவல் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்காதது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். கவர்னர், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் யாரையும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. அவர்கள் டாக்டர்களையும், சசிகலாவையும் தான் பார்த்தார்கள்.

மருத்துவமனையில் இருந்த 27 கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், டி.வி. பார்த்தார், விரைவில் வீடு திரும்புவார் என்று கூறிவந்தனர். ஆனால் அவருக்கு இருதயம் செயலிழந்தது என்றும், அதனால் மறுநாள் அவர் மரணம் அடைந்துவிட்டார் என்றும் திடீரென அறிவித்தனர். இவை எல்லாம் ஜெயலலிதா மரணத்தில் தீவிரமான சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன.

சி.பி.ஐ. விசாரணை

அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் ஜெய லலிதா நீர்சத்து குறைவு, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அன்றே நினைவு இல்லாமல் இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு எங்கள் சந்தேகங்களை அதிகமாக்குகிறது. எனவே ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு பி.ஆர்.சுந்தரம் கூறினார்.

மத்திய மந்திரி பதில்

அதற்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த்குமார் பதில் அளித்து கூறியதாவது:-

தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் திடீர் மறைவு இந்த அவைக்கும், நாட்டுக்கும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மர்மமான சூழ்நிலையில் அவரது மரணம் நிகழ்ந்திருப்பதால் இப்படிப்பட்ட உணர்வு அனைவருக்கும் உள்ளது.

ஆனாலும் இதுதொடர்பாக மாநில அரசு ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணை அறிக்கை முதலில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன்பின்னரே மத்திய அரசு இதுதொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியும்.

இவ்வாறு அனந்த்குமார் கூறினார். 

மேலும் செய்திகள்