தற்கொலை குற்றமில்லை எனும் மசோதாவிற்கு சசி தரூர் வரவேற்பு

தற்கொலையை குற்றமாக கருதுவதை நீக்கும் மத்திய அரசின் மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான சசி தரூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2017-03-24 12:28 GMT
புது டெல்லி

தற்கொலையை குற்றமாக கருதுவதை நீக்கும் மத்திய அரசின் மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான சசி தரூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டா கொண்டு வந்துள்ள மனநல கவனிப்பு எனும் இம்மசோதா தற்கொலையை குற்றமற்றதாக ஆக்குவதற்கு வழி செய்கிறது. இதன் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சசி தரூர், “நான் மனநல நோயால் பாதிக்கப்பட்ட வாழ்ந்த அனுபவமுள்ளவன்” என்று குறிப்பிட்டார். பல வருடங்களாக மன நல பாதிப்பினை இந்திய சமுதாயம் ஏற்கவோ, சாதகமாகவோ கருதவோ செய்யவில்லை. நான் தற்கொலையை குற்றமற்றதாக்கும் மசோதாவை வரவேற்கிறேன்” என்றார்.

”இருபது இந்தியர்களில் ஒருவருக்கு மனநல பாதிப்பு இருக்கிறது; ஒரு தனியார் ஆய்வு 50 சதவீத மருத்துவ மாணவர்கள் மன நல பாதிப்பில் இருக்கின்றனர் என்று கூறுகிறது” என்றார் சசி தரூர். காவல்துறையும், ஊடகங்களும் மனநல அழுத்தங்களை கையாள்வதில் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். ”ஊடகங்கள் தற்கொலையை பற்றி எழுதுவது அதனை பிறர் நாடுவதை ஊக்கப்படுத்துவது போல் இருக்கிறது” என்றார் சசி தரூர்.

கல்வி நிலையங்கள் வல்லுநர்களை கொண்டு மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆலோசனை பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்