தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறும் இலங்கையை நட்பு நாடாக கூறக் கூடாது

பாராளுமன்றத்தில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசும்போது கூறியதாவது:–

Update: 2017-03-24 23:15 GMT

புதுடெல்லி,

தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறும் இலங்கையை நட்பு நாடாக இந்தியா கூறக் கூடாது என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசும்போது கூறியதாவது:–

நட்பு நாடாக கூறக்கூடாது

இலங்கை அரசு திட்டமிட்டே அங்குள்ள ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்து வருகிறது. அங்கு 2009–ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த சண்டையில் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கமி‌ஷன் சர்வதேச விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் இலங்கை எடுக்கவில்லை. மாறாக இந்த விசாரணையை தள்ளி வைப்பதற்காக பல்வேறு விதமான தந்திரங்களை கையாண்டு வருகிறது. தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறும் இலங்கையை நமது நட்பு நாடு என்ற இந்தியா கூறக் கூடாது.

மீனவர்கள் மீது தாக்குதல்

மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கமி‌ஷன் இன்னும் 2 ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அரசு 2011–ம் ஆண்டு முதலே இதுபோல் விசாரணையை தொடங்காமலும், மனித உரிமைகள் மீறல் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாமலும் இலங்கை காலம் தாமதம் செய்து வருகிறது.

அதேபோல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது. இதையும் இந்திய அரசு அமைதியாக இருந்தவாறு வேடிக்கை பார்த்து வருகிறது.

அண்டை நாடுகளுடன் அமைதியான உறவை பேணவேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை எங்கள் கட்சி வரவேற்கிறது. அதேநேரம் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கு நாம் ஏன் மரியாதை தரவேண்டும்?

இவ்வாறு அவர் கூறினார்.

நிதி என்ன ஆனது?

வேணுகோபாலுக்கு பிஜூ ஜனதா தளம் உறுப்பினர் மஹ்தாப் ஆதரவு தெரிவித்து பேசும்போது, ‘‘இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இந்திய அரசால் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக பயன்படுத்தப்பட்டதா? என்பதை அறிய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பாராளுமன்ற விவகார மந்திரி ஆனந்த் குமார், ‘‘இது ஒரு தீவிரமான பிரச்சினைதான். வேணுகோபாலின் கவலைகள் குறித்து வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜிடம் தெரிவிக்கப்படும். அவர் இலங்கையில் தமிழர் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்’’ என்று குறிப்பிட்டார்.

சி.பி.ஐ. விசாரணை தேவை

பாராளுமன்றத்தில் நேற்று முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் பேசும்போது, ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், ‘‘தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டால் அது ஜெயலலிதாவின் மரணத்தில் மறைந்திருக்கும் உண்மையை வெளியே கொண்டு வராது. எனவேதான் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்