ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு 5–ந்தேதி விசாரணை

ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், அவரது சொத்துக்கள் மூலமாக அபராதத்தை வசூலிக்க கோரியும் கர்நாடக அரசு சார்பில் கடந்த 21–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2017-03-30 22:45 GMT
புதுடெல்லி,

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

இதை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து, 4 பேரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக அப்பீல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போகிறது (இல்லாமல் போகிறது) என கூறி, மற்ற 3 பேருக்கும் தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்தனர். இதையடுத்து 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், அவரது சொத்துக்கள் மூலமாக அபராதத்தை வசூலிக்க கோரியும் கர்நாடக அரசு சார்பில் கடந்த 21–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வருகிற 5–ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்