ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் 7.14 சதவீதம் வாக்குப்பதிவு

ஸ்ரீநகர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் 7.14 சதவீத ஓட்டுகளே பதிவானது. வன்முறையாளர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர்.

Update: 2017-04-09 23:47 GMT

ஸ்ரீநகர்,

ஸ்ரீநகர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் 7.14 சதவீத ஓட்டுகளே பதிவானது. வன்முறையாளர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர்.

ஸ்ரீநகர் தொகுதி இடைத்தேர்தல்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு 2014–ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளராக தாரிக் ஹமீது காரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் எதிர்க்கட்சி வேட்பாளரான பரூக் அப்துல்லாவை தோற்கடித்து இருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பர்கான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது. இதை தடுக்க ஆளும் கட்சி தவறியதாக கூறி தாரிக் ஹமீது காரா தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

வன்முறை

இதையடுத்து ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எனினும் அதையும் மீறி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கண்டேர்பால் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மீது வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து பாதுகாப்பு படையினரும், போலீசாரும் வன்முறை கும்பலை கலைக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது வன்முறையாளர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல் பட்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டது.

துப்பாக்கி சூடு

ஸ்ரீநகர் மாவட்டத்திலும் பல இடங்களில் வன்முறை கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவர்களை கலைந்து போகுமாறு பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தனர். மேலும் கண்ணீர்புகை குண்டுகளையும் வீசி அவர்களை கலைக்க முயன்றனர்.

அதையும் மீறி வன்முறை கும்பல் தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது. இதையடுத்து வேறுவழியின்றி வன்முறை கும்பல் மீது பாதுகாப்பு படையினரும், போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

8 பேர் பலி

பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 8 பேர் பலியாகினர். பொதுமக்கள், பாதுகாப்புபடையினர் உள்பட பலர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

ஸ்ரீநகர் தொகுதியில் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களால் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. சுமார் 12½ லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த பாராளுமன்ற தொகுதியில் மதியம் 3 மணி வரை 5.84 சதவீத ஓட்டுகளே பதிவாகி இருந்தன. 70 சதவீத வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இடைத்தேர்தலில் மொத்தம் 7.14 சதவீத ஓட்டுகளே பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சாந்தனு தெரிவித்தார்.

அங்கு மேலும் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். வன்முறை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் ஸ்ரீநகர் தொகுதிக்குட்பட்ட 3 மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.

கண்டனம்

தேர்தலை அமைதியாக நடத்த தவறியதாக முதல்–மந்திரி மெகபூபா முப்தி அரசுக்கு தேசிய மாநாட்டு கட்சியினர் தலைவரும், ஸ்ரீநகர் தொகுதி வேட்பாளருமான பரூக் அப்துல்லா, அவருடைய மகனும், முன்னாள் முதல்–மந்திரியுமான உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்