‘ஹெல்மட்’ அணியாததால் அபராதம்: போலீசாரை அடித்து உதைத்த பா.ஜனதா தலைவரின் உறவினர்கள்

மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மட்’ அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்த போலீசாரை பா.ஜனதா தலைவரின் உறவினர்கள் கொடூரமாக தாக்கி உள்ளனர்.

Update: 2017-04-24 08:59 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலம் குணாவில் மூன்று பெண்கள் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணியாமல் சென்று உள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய உள்ளூர் போக்குவரத்து போலீஸ் அசுதோஷ் திவாரி அபராதம் விதித்து உள்ளார். இதுதொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்த பெண்கள் உள்ளூர் பாரதீய ஜனதா தலைவர் சோபா ரகுவான்சியிடம் தெரிவித்து உள்ளனர். உடனடியாக பா.ஜனதா தலைவரின் உறவினர்கள் அப்பகுதிக்கு சென்று அசுதோஷ் திவாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் அவரை கொடூரமான முறையில் தாக்கி உள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியும் வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீஸ் அதிகாரி விவேக் அஸ்தானா பேசுகையில், அரசு பணியாளரை தாக்கியது மற்றும் அவரை கடமையை செய்ய விடாமல் தடுத்தது என்ற குற்றச்சாட்டுகளில் இருவரை கைது செய்து உள்ளோம் என்றார். 

இச்சம்பவம் தொடர்பாக நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம், விசாரணை முடிந்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறிஉள்ளார் அஸ்தானா. இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட ராகுல் ரகுவான்சி பேசுகையில், எங்களுடைய குடும்பத்தை சேர்ந்த இரு பெண்களிடம் போலீஸ் அசுதோஷ் தவறாக நடந்துக் கொண்டார். நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம், அப்போது எங்களிடம் தவறாக நடந்துக் கொண்டார்.

எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் போலீசாரை தாக்கவில்லை, மாறாக எங்களிடம் அவர் தவறாக நடந்துக் கொண்டதில் கோபம் அடைந்த உள்ளூர் பொதுமக்களே அடித்தனர் என்றும் கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்