இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம்: டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நாளை சென்னை வருகை

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நாளை சென்னை வருகை தரவுள்ளது.

Update: 2017-04-26 12:28 GMT
புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த 16–ந் தேதி கைது செய்யப்பட்டார்.அவர் கொடுத்த தகவலின் பேரில் டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. 

இதையொட்டி டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். 
இந்த விசாரணை நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது. அதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நேற்று இரவு 12 மணிக்கு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். டி.டி.வி.தினகரனுடன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன் தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனாவும் ஆஜர்படுத்தப்பட்டார் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். தினகரனுக்கு ஜாமீன் வழங்க டெல்லி காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்தனர். இதையடுத்து, தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. 

இந்த நிலையில், டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக நாளை சென்னைக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்