அதிக கடன் பட்டியலில் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்கள் முன்னிலை ரிசர்வ் வங்கி தகவல்

அதிக கடன் பெற்றுள்ள மாநிலங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய கையேட்டினை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.

Update: 2017-06-25 21:10 GMT

மும்பை,

அதிக கடன் பெற்றுள்ள மாநிலங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய கையேட்டினை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் குஜராத், மராட்டியம் உள்ளிட்டவை அடங்கிய மேற்கு மாநிலங்களும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டவை அடங்கிய தெற்கு மாநிலங்களும் முன்னணியில் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மாநிலங்களின் கடன் அளவு கடந்த 25 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அந்த வகையில் ரூ.1,04,300 கோடியாக இருந்த இந்த மாநிலங்களின் கடன், 1990–2015 காலகட்டத்தில் ரூ.68,78,500 கோடி அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.

கடந்த 2014–15–ம் நிதியாண்டு நிலவரப்படி இந்த மாநிலங்கள் மொத்தம் ரூ.41,70,600 கோடி கடன் வைத்திருப்பதாக அந்த கையேட்டில் கூறப்பட்டு உள்ளது. இது மொத்த கடனில் 60.6 சதவீதம் ஆகும். இதில் மேற்கு மாநிலங்கள் ரூ.23,39,900 கோடியும், தெற்கு மாநிலங்கள் ரூ.18,30,700 கோடியும் கடன் வைத்துள்ளன.

மேலும் வடக்கு மண்டலம் ரூ.15,86,800 கோடி, மத்திய மண்டலம் ரூ.5,50,200 கோடி, கிழக்கு மண்டலம் ரூ.5,17,300 கோடி மற்றும் வடகிழக்கு மண்டலம் ரூ.53,600 கோடி கடனுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மேலும் செய்திகள்