பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் வக்கீல்கள் சந்திப்பு

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை வக்கீல்கள் சந்தித்து பேசினர்.

Update: 2017-07-24 22:39 GMT

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகளை பெற்றுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு அறிக்கையை வழங்கினார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த குழு சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியது. சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் தற்போது சாதாரண அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக அ.தி.மு.க.(அம்மா) அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 20–ந் தேதி பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தார். ஆனால் கைதிகள் பார்வையாளர் நேரம் முடிவடைந்துவிட்டதால், அன்று அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் அவர் நேற்று பெங்களூரு வந்து சசிகலாவை சந்திப்பதாக தகவல் வெளியானது. இதனால் சில பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர். ஆனால் டி.டி.வி.தினகரன் வரவில்லை. சசிகலாவை அவருடைய வக்கீல்கள் அசோகன், மூர்த்திராவ், மகேஷ் ஆகிய 3 பேரும் நேற்று நேரில் சந்தித்து பேசினர். பகல் 3 மணிக்கு சிறைக்கு சென்றனர். அப்போது உள்ளே செல்வது தொடர்பாக அங்கு இருந்த போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது.

சுமார் 5 நிமிடங்களுக்கு பிறகு வக்கீல்கள் உள்ளே சென்றனர். அவர்கள் தங்களின் கைகளில் புத்தகம், ஒரு பாலித்தீன் பை, ஒரு சாதாரண பை எடுத்துச் சென்றனர். உள்ளே சசிகலாவுடன் பேசிவிட்டு அவர்கள் மாலை 5 மணியளவில் சிறையைவிட்டு வெளியே வந்தனர். அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்ற புத்தகம் மற்றும் பைகளை திரும்ப எடுத்து வந்தனர்.

சசிகலாவை நேரில் சந்தித்து பேசியது குறித்து அவர்களிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். ஆனால் அவர்கள் கருத்து எதையும் சொல்ல மறுத்துவிட்டனர். சிறைக்கு உள்ளே செல்லும் முன் வக்கீல்கள் கூறுகையில், “சாதாரண சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறை சீருடையை அணிய தேவை இல்லை. அவர்கள் சாதாரண உடையை அணியலாம். ஆனால் சிலர் இதுகுறித்து தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள்“ என்றனர்.

மேலும் செய்திகள்