ராம்நாத்கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்க மைல்கல்: பிரதமர் மோடி

ராம்நாத்கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்க மைல்கல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2017-07-25 10:16 GMT
புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் சித்தாந்த வாதியான  ஷியாம பிரசாத் முகர்ஜி தொடங்கிய  ஜனசங்கம் அமைப்பில்  பயணத்தை தொடங்கி நாட்டின் ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்க மைல்கல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் இன்று பதவிஏற்றுக்கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன் பாஜக ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களும் மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,”  ஷியாம பிரசாத் முகர்ஜியின் அமைப்பில் இருந்து இந்த பயணம் துவங்கியது.  லட்சகணக்கான மக்கள் இந்த அமைப்பிற்காக தியாகம் செய்தனர். புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றதன் மூலம் குறிப்பிடத்தக்க மைல் கல் எட்டப்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி கூறியதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய அரசியல் அமைப்பில் மிக உயரிய பொறுப்பாக கருதப்படும் நாட்டின் முதல் குடிமகன் (ஜனாதிபதி) பொறுப்பை ராம்நாத்கோவிந்த் இன்று ஏற்றுக்கொண்டார். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த பொறுப்பில் அமருவது இதுதான் முதல் தடவையாகும். இந்த நிலையில், பிரதமர் மோடி கூறிய கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  இந்த கூட்டத்தில் போது,  ஏழைமக்களின் நலன், சமூக நல்லிணக்கம், நல்லாட்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்த அனைவரும் பாடுபட வேண்டும் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் கேட்டுக்கொண்டதாக  பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்