கார்த்தி தனது அயல்நாட்டு வங்கிக்கணக்குகளை மூடினார் - சிபிஐ குற்றச்சாட்டு

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி தனது அயல்நாட்டு வங்கிக்கணக்குகளை மூடினார் என்று சிபிஐ வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Update: 2017-09-22 12:04 GMT
புதுடெல்லி

அவர் மீது தேடப்படும் நபர் என்ற நோட்டிஸ் வழங்கப்பட்டது அவர் அயல்நாடு செல்ல முடியாதவாறு தடுப்பதற்கே என்றும் சிபிஐ தெரிவித்தது.

கார்த்தி மீதான ஊழல் வழக்கின் விசாரணையின் போது பல விஷயங்கள் வெளிவந்துள்ளன; மேலும் பல விஷயங்கள் வெளியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் விசாரணை அமைப்பானது கூறியுள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு நடைபெற்ற விசாரணையின் போது முத்திரையிட்ட கவரில் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி கேட்டது சிபிஐ. அதற்கு கார்த்தியின் வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யும் முன் ஆவணங்களில் என்னவுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “கார்த்தி அயல் நாட்டில் என்ன செய்தார்” என்பது அந்த ஆவணங்களிலுள்ளது என்றார். கார்த்தி விசாரணையின்போது தனக்கு அயல்நாட்டில் ஒரேயொரு வங்கிக் கணக்கு மட்டுமேயுள்ளது என்றார். ஆனால் அவர் வெளிநாட்டிற்கு சென்றபோது பல வங்கிக் கணக்குகளை மூடியுள்ளார் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

ஆனால் கபில் சிபல், “ கார்த்தியை விசாரித்தது உண்மை; ஆனால் இந்த விஷயம் குறித்து ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்றும் கார்த்தியின் கையெழுத்தை ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கில் காட்டினால்கூட அவர்கள் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் அல்லது கறுப்புப்பணச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த முடியும்” என்றார்.
 
கடந்த 2007 ஆம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தின் மூலம் ரூ 305 கோடியை அந்நிய நாட்டிலிருந்து பெறுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை பெற்றதில் நடந்த முறைகேடுகள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி பதியப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ எம் கன்வில்கர் மற்றும் டி ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

மேலும் செய்திகள்