தனித்த மத அந்தஸ்து கேட்டு லிங்காயத்துகள் பெரும் பேரணி

கர்நாடக மாநிலத்தில் வலிமை மிகுந்த சமூகமான லிங்காயத்துகள் தனித்த மத அந்தஸ்து கேட்டு பெரும் பேரணியை இன்று நடத்தினர்.

Update: 2017-09-24 10:56 GMT
கல்புர்கி (கர்நாடகம்)


இச்சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மடாதிபதிகளும் இப்பேரணியில் கலந்து கொண்டனர். மேலும் அண்டை மாநிலங்கள் மற்றும் மாநிலத்தின் ஹைதராபாத் - கர்நாடகப் பகுதியிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.  இந்த வீரசைவ - லிங்காயத் சமூகம் கர்நாடகத்தின் வாக்காளர்களில் 17 விழுக்காட்டினரை தன்னகத்தே கொண்டுள்ளது. எந்தக் கட்சி மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்பதை தீர்மானிக்கும் வலிமையுடைய சமூகமாகவும் இவர்கள் உள்ளனர்.

இதனால் இன்று நடந்த பேரணியில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த முக்கிய லிங்காயத் சமூக பிரமுகர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பேசிய பலர் லிங்காயத் சமூகம் இந்து மதத்தின் ஒரு பிரிவில்ல என்றும் வீரசைவமும் லிங்காயத்தும் கூட ஒன்றல்ல என்றும் கூறினர். எனவே லிங்காயத்துக்களை தனித்த மதமாக அங்கீகரிக்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் வீரசைவ மகாசபையானது வீரசைவர்களுக்கானது மட்டுமே என்றும் அது லிங்காயத்துக்களுக்கானதல்ல என்றும் கூறினர். லிங்காயத்துகளில் 71 துணைப்பிரிவுகள் உள்ளன என்றும் கூறினர்.

முதல்வருக்கு அளித்துள்ள மனுவில் அவர்கள் தங்களுக்கு வீரசைவ-லிங்காயத்துக்கள் என சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றனர். அதே போல மத்திய அரசு லிங்காயத்துக்களை தனித்த மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பேரணியில் 100 ற்கும் மேற்பட்ட மடாதிபதிகள் நாடு முழுவதுமிருந்து கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்