பெண்ணாக மாறிய இந்திய கடற்படை வீரர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன் என பேட்டி
பெண்ணாக மாறிய இந்திய கடற்படை வீரர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்து உள்ளார்.;
விசாகப்பட்டணம்,
இந்திய கடற்படையின் கிழக்கு ஆணையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விசாகப்பட்டினத்தில் ஐ.என்.எஸ் எக்சிலா தளம் இயங்கி வருகிறது. இதன் பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்த கடற்படை வீரர் மணிஷ் குமார் கிரி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மும்பையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறி விட்டார். இதனை தொடர்ந்து கடற்படை விதிகளின் படி அவருக்கு இத்தகைய பதவிகளை வழங்க இயலாது என்பதால் அவரைப் பணியில் இருந்து விடுவிப்பதாக கடற்படை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை இத்தகைய ஒரு சூழ்நிலையை சந்தித்தது இல்லையென்பதால் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கும் இதுபற்றிய விரிவான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது.
முப்படைகளிலும், போர் முனைகளிலும் பெண்களுக்கு இன்னும் சவாலான பணிகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று உள்ளநிலையில் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இந்நிலையில் பெண்ணாக மாறிய இந்திய கடற்படை வீரர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாகவும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்போவதாகவும் தெரிவித்து உள்ளார். சாபி என தன்னுடைய பெயரை மாற்றி உள்ள அவர் மீடியாக்களுக்கு அளித்து உள்ள பேட்டியில், முன்பு எப்படி இருந்தனோ, அப்படியே உள்ளேன். அதே திறன் இப்போதும் உள்ளது. எப்படி அவர்கள் என்னை விடுவிக்க முடியும். நான் என்னுடைய பாலினத்தை மாற்றியதற்காகவா? என கேள்வி எழுப்பி உள்ளார். நான் சுப்ரீம் கோர்ட்டு செல்வேன், தேவைப்பட்டால், என்னுடைய உரிமைக்காக போராடுவேன் என கூறிஉள்ளார்.
சாபி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் சென்ற போது பாலின மாற்று சிகிச்சை எடுத்து உள்ளார் என தெரியவந்து உள்ளது.
நேற்று சாபி பேசுகையில், “கப்பலில் பணியாற்றுவது என்னுடைய வழக்கமான பணியாகும். பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர், நான் கப்பலில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டேன், கடற்படை தளத்திலே பணி வழங்கப்பட்டது. இது மிகவும் கவலைக்குரியது, நான் பாலினத்தை மாற்றியதன் காரணமாக நான் தகுதியற்றவர் என்கிறார்கள். கடற்படை அதிகாரிகள் என்ன மன ரீதியாக தகுதியற்றவர் ஆக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் என்னை மனரீதியாக தொந்தரவு செய்கிறார்கள்,” எனவும் குற்றம் சாட்டியிருந்தார். என்னை மன ரீதியாக தகுதியற்றவர் என நிரூபனம் செய்ய முயற்சி செய்தார்கள், அவர்கள் அதில் தோல்வியை தழுவி உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.