ஜெய் ஷா விவகாரம்: பா.ஜனதா தார்மீக நிலையை இழந்துவிட்டது யஷ்வந்த் சின்ஹா விமர்சனம்

அமித் ஷா மகனை வலுவாக பாதுகாக்கும் பாரதீய ஜனதாவை யஷ்வந்த் சின்ஹா கடுமையா விமர்சனம் செய்து உள்ளார்.;

Update:2017-10-11 16:26 IST

பாட்னா,

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்த பா.ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் நிதிமந்திரியுமான யஷ்வந்த் சின்ஹா, பாரதீய ஜனதா மீதான கடுமையான தாக்குதல்களை தொடுத்து வருகிறார். 

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவின் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த 2013-14-ம் நிதி ஆண்டை காட்டிலும், 2015-16-ம் நிதி ஆண்டில் 80 கோடி அளவுக்கு நிகர லாபம் அடைந்துள்ளது என்று ’தி வயர்’ The Wire செய்தி வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஜெய் அமித் ஷா, தனது தந்தை அமித்ஷாவின் அரசியல் செல்வாக்கை பாதிக்கும் வகையிலும், தங்கள் வியாபாரத்தை நசுக்கும் வகையிலும் ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். செய்தி நிறுவனம் மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். 

இவ்விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து உள்ளன. ஆனால் பாரதீய ஜனதாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஜெய் ஷாவை வலுவாக பாதுகாத்து வருகிறார்கள். செய்தி வெளியாகியதும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் “தி வயர் இணையதளத்தின் உரிமையாளர், செய்தி ஆசிரியர் மற்றும் குறிப்பிட்ட கட்டுரையை எழுதியவர்கள் மீது ஜெய் ஷா வழக்கு தொடரவிருக்கிறார். சிவில், கிரிமினல் அவதூறு வழக்குகளை அவர் தொடர்வார்” என்றார். அமித் ஷாவின் மகனுக்கு எதிராக விசாரணை அவசியமற்றது என ராஜ்நாத் சிங் கூறினார். 

இப்போது அமித் ஷா மகனை வலுவாக பாதுகாக்கும் பாரதீய ஜனதாவை கடுமையா விமர்சனம் செய்து உள்ள யஷ்வந்த் சின்ஹா, பாரதீய ஜனதா இவ்வளவு வருடங்களாக சேர்த்த மொத்த தார்மீக நிலையையும் இழந்துவிட்டது எனவும் கூறிஉள்ளார். தி வயர் செய்தி இணையதளத்திற்கு எதிராக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுபோன்ற நடவடிக்கையானது மீடியாவின் குரலை ஒடுக்கும் முயற்சியாகும் எனவும் விமர்சித்து உள்ளார் யஷ்வந்த் சின்ஹா. 

 “அமித் ஷாவின் மகன் ஜெஷ் ஷாவை பாதுகாக்க மத்திய அமைச்சர்கள் இவ்விவகாரத்தில் குதித்த முறையை நான் ஏற்கவில்லை. அவர் மத்திய அமைச்சர் மட்டும்தான், பட்டைய கணக்காளர் கிடையாது,” என பியூஷ் கோயல் பேச்சை குறிப்பிட்டு சின்ஹா பேசிஉள்ளார். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் ஜெய் ஷா நிறுவனத்தின் வருமானம் அதிகரிப்பு என்ற செய்தி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. விசாரணை விவகாரம் என்பது எந்தஒரு அரசு நிர்வாகமும் மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

இதற்கிடையே யஷ்வந்த் சின்ஹாவிற்கு காங்கிரசுடன் தொடர்பு உள்ளது என பாரதீய ஜனதா குற்றம் சாட்டிஉள்ளது.

மேலும் செய்திகள்