முன்கூட்டியே அறிவிக்காமல் எல்லை ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார், பிரதமர் மோடி

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவத்தினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்.

Update: 2017-10-20 00:00 GMT

ஸ்ரீநகர்,

வட மாநிலங்களில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரான பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி, அவர் நேற்று முன்கூட்டியே அறிவிக்காமல், காஷ்மீர் மாநிலம் குரஸ் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சென்றார். அங்கு இந்திய ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியோருடன் அவர் தீபாவளி கொண்டாடினார்.

அவர்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார். அவர் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவது, இது தொடர்ச்சியாக 4–வது ஆண்டு ஆகும்.

அவர் தீபாவளி கொண்டாடிய பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு மிக அருகில் உள்ளது. அங்கிருந்து ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளுடன் அடிக்கடி துப்பாக்கி சண்டை நடக்கும் இடமாகும்.

ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, பிறகு அவர்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:–

எல்லோரையும் போலவே நானும் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட விரும்பினேன். ஆகவே, படையினருடன் கொண்டாட இங்கு வந்துள்ளேன். ஏனென்றால், ராணுவத்தினரை எனது குடும்பமாகவே நான் கருதுகிறேன். அவர்களுடன் நேரத்தை கழிக்கும்போது எனக்கு புதிய ஆற்றல் கிடைக்கிறது. அவர்களது தியாகத்தையும், கடமை உணர்வையும் பாராட்டுகிறேன்.

இங்குள்ள ராணுவ வீரர்கள் பலர் யோகா செய்வதாக கேள்விப்பட்டேன். யோகா செய்வதால், அவர்களின் திறன் நிச்சயமாக அதிகரிக்கும். அமைதி உணர்வு கிடைக்கும்.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பலர், சிறந்த யோகா பயிற்சியாளர்களாக மாறி உள்ளனர்.

ராணுவ வீரர்கள் புதுமைகளை படைக்க வேண்டும். அது அவர்களின் பணியை எளிமை ஆக்கும். எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்கு ராணுவ தினத்திலும், விமானப்படை தினத்திலும், கடற்படை தினத்திலும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ராணுவ வீரர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அதனால்தான், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை நிறைவேற்றியது.

தங்கள் அன்புக்கு உரியவர்களை பிரிந்து வந்து தாயகத்தை காக்க எல்லையில் நிற்கும் வீரர்கள் அனைவரும் துணிச்சலுக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் அடையாள சின்னங்கள் ஆவர்.

அங்குள்ள பார்வையாளர் புத்தகத்திலும், அவர் தனது கருத்தை எழுதினார். வீரர்களுடன் 2 மணி நேரம் செலவிட்டார். ராணுவ தளபதி பி.எஸ்.ரவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்