வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Update: 2017-10-21 21:30 GMT

மும்பை,

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு இந்திய ரிசர்வ் வங்கி பதில் அளிக்கையில், ‘‘வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று எந்தவொரு உத்தரவும் எங்களால் பிறப்பிக்கப்படவில்லை’’ என்று கூறியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஏற்கனவே வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்களை பெரும்பாலானவர்கள் இணைத்து விட்ட நிலையில், இப்படி இணைக்க வேண்டும் என்று எந்தவொரு உத்தரவும் போடவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியதாக வெளியான தகவல், பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இதை மறுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி நேற்று ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:–

2017–ம் ஆண்டு, ஜூன் மாதம் 1–ந் தேதி அதிகாரப்பூர்வ கெஜட்டில் வெளியிடப்பட்ட சட்ட விரோத பண பரிமாற்ற (ஆவண பராமரிப்பு) இரண்டாவது திருத்த விதிகள், 2017–ன்படி வங்கிகணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்துகிறது, இந்த விதிகள் சட்டப்பூர்வ அந்தஸ்தை கொண்டுள்ளன. எனவே மேலும் அறிவுறுத்தலுக்காக காத்திருக்காமல், அவற்றை வங்கிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வங்கிகளில் கணக்கு தொடங்கவும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேலும் நிதி பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.

வங்கிகளில் தற்போது கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31–ந் தேதிக்குள், தங்களது ஆதார் எண்களை இணைத்து விட வேண்டும், இல்லாதபட்சத்தில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்