குஜராத்தில் கோகா மற்றும் பரூச் இடையே படகு போக்குவரத்தினை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் கோகா மற்றும் பரூச் இடையே படகு போக்குவரத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2017-10-22 07:24 GMT
வதோதரா,

குஜராத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்காக பாரதீய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டு பவ்நகர் மற்றும் வதோதரா பகுதியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். எண்ணற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அவர் குஜராத்திற்கு இந்த மாதத்தில் 3வது முறையாக சுற்று பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் பிரதமர் மோடி ரூ.615 கோடி மதிப்பிலான படகு போக்குவரத்தினை தொடங்கி வைத்தார்.

இந்த படகு போக்குவரத்து பவ்நகரில் உள்ள கோகா பகுதியில் இருந்து பரூச் நகரின் டஹேஜ் பகுதிக்கு இடையே நடைபெறும். அதன்பின் கோகா பகுதியில் இருந்து பிரதமர் மோடி படகில் பயணித்து டஹேஜ் நகருக்கு வந்தடைகிறார்.

டஹேஜ் பகுதியில் பொது கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அங்கிருந்து வதோதரா நகருக்கு சென்றடைந்து ரூ.1,140 கோடி மதிப்பிலான பல எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மேலும் செய்திகள்