பிரதமர் மோடி புல்லட் ரெயில் திட்டம்; ஆமதாபாத்-மும்பை இடையே ரெயில்களில் பதிவாகாத டிக்கெட்கள்!

ஆமதாபாத்-மும்பை இடையே இயக்கப்படும் ரெயில்களில் 40 சதவிதம் முன்பதிவு செய்யப்படுவது இல்லை என தெரியவந்து உள்ளது.

Update: 2017-10-31 12:36 GMT
மும்பை,

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கனவுத்திட்டங்களில் ஒன்றாக அதிவேக புல்லட் ரெயில் இயக்கமும் இருந்து வருகிறது. இதற்காக ஜப்பான் அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பயனாக இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்க அந்த நாடு முன்வந்தது. அதன்படி முதற்கட்டமாக குஜராத்தின் ஆமதாபாத்- மும்பை இடையே புல்லட் ரெயில் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் இறுதி செய்யப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாக அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் தொடக்க விழா செப்டம்பர் 14-ல் குஜராத் மாநிலம் சபர்மதியில் உள்ள தடகள மைதானத்தில் நடந்தது.

பிரதமர் மோடி புல்லட் ரெயிலுக்கு திட்டமிட்டு உள்ள நிலையில் ஆமதாபாத் மற்றும் மும்பை இடையே இப்போது ரெயில்வே இயக்கிவரும் ரெயில்களில் 40 சதவித இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுவது இல்லை என்பது ஆர்டிஐ தகவலில் தெரியவந்து உள்ளது. 

மும்பையை சேர்ந்த ஆர்வலர் அணில் கல்காளி பெற்று உள்ள ஆர்.டி.ஐ. பதிலில் இந்த மார்க்கத்தில் மட்டும் ரெயில்வே ரூபாய் 30 கோடி இழப்பை கடந்த காலாண்டில் எதிர்கொண்டு உள்ளது. அதாவது மாதம் ரூ. 10 கோடி இழப்பை சந்தித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இம்மார்க்கமாக இயக்கப்படும் ரெயில்களில் 40 சதவித இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுவது கிடையாது எனவும் இதனால் மேற்கு ரெயில்வேக்கு பெரும் இழப்பு நேரிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

ஆமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையானது திருப்திகரமாக இல்லையென கூறி இம்மார்க்கமாக புதிய ரெயில்களை இயக்கும் திட்டம் கிடையாது என இந்தியன் ரெயில்வேயும் கூறிவிட்டது. ஆமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் ரெயில்கள் 44 சதவிதம் காலியாகவே செல்கிறது, மொத்த சீட்களில் 40 சதவிதம் முன்பதிவு செய்யப்படுவது கிடையாது. ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரையில் இம்மார்க்கமாக 735,630 சீட்கள் கொண்ட 32 மெயில்/எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளது. 

441,795 சீட்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது, ரூ. 44,29,08,22 வருவாய் எதிர்பாக்கப்பட்டது, ஆனால் ரூ. 30,16,24,623 மட்டுமே ரெயில்வேக்கு கிடைத்து உள்ளது, கடந்த காலாண்டில் மட்டும் ரூ. 14,12,83,597 இழப்பு நேரிட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்