அகமதாபாத் வீதிகளில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு போலீசார் அனுமதி மறுப்பு

அகமதாபாத் வீதிகளில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளது குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2017-12-11 11:16 IST
அகமதாபாத்,

182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக கடந்த டிச.9-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 92 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 14-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு ஆளும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜனதா கட்சியினரும் ஆட்சியை கைப்பற்ற விரும்பும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பிற காங்கிரஸ் தலைவர்களும் அனல் பறக்கும்  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாளையோடு பிரசாரம் ஓய்வதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், நாளை குஜராத் தலைநகர் அகமபாத்தில் சாலை வீதிகளில் ஊர்வலமாக பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், இந்த இரண்டு தலைவர்களின் பிரசாரத்திற்கு அகமதாபாத் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மோடி, ராகுல் காந்தி ஆகிய இரு தலைவர்களின் பிரசார ஊர்வலங்களும் அருகருகே நடைபெற உள்ளதால், பரஸ்பர சச்சரவு ஏற்பட்டு  அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற உள்ளதால், மக்களின் அன்றாட பணிகளுக்கு கடும் இடையூறாக அமையும் எனவும் போலீஸ் தரப்பில் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்