ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்குகள் தொடர்பாக நாளை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்குகள் தொடர்பாக நாளை 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது.

Update: 2017-12-14 13:26 GMT

 புதுடெல்லி,  


நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
  
இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது அரசின் நல திட்டங்களின் பலன்களை பெறுவதற்காக ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடுவை மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நீடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும்  செல்போன் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 6–ந் தேதி என்பதில் இருந்து நீட்டிக்கப்படுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு முடித்தது. 

ஆதார் இணைப்பு கட்டாயமா அல்லது அதற்கு தடை விதிக்கப்படுமா என்பது குறித்த இடைக்கால தீர்ப்பை 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு வெளியிடுகிறது. 

 ஆதார் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக வரும் ஜனவரி மாதம் 17–ந் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.

மேலும் செய்திகள்