இந்திய கப்பற்படையில் அடுத்த 10 ஆண்டுகளில் விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்படையும்: தளபதி சுனில் லம்பா

அடுத்த 10 ஆண்டுகளில் விமானங்களின் எண்ணிக்கையை இரு மடங்காக்க இந்திய கப்பற்படை முடிவு செய்துள்ளது என கடற்படை தளபதி சுனில் லம்பா இன்று கூறியுள்ளார்.

Update: 2017-12-16 11:19 GMT

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள விமான படை அகாடமிக்கு சென்ற இந்திய கப்பற்படை தளபதி சுனில் லம்பா அங்கு நடந்த அணிவகுப்பினை ஆய்வு செய்தார்.  அதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கப்பற்படையில் இயங்கி வரும் விமான பிரிவில் 238 விமானங்கள் வரை உள்ளன.  அவற்றில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் குறுகிய தூர மற்றும் தொலை தூர கடல் ரோந்து பணியில் ஈடுபடும் விமானங்களும் உள்ளன.

இந்த நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் கப்பற்படையின் விமான பிரிவில் விமானங்கள் எண்ணிக்கையை 500 வரையில் கூட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.  அதில், வெவ்வேறு வகையான விமானங்கள் இருக்கும் என கூறினார்.

தொடர்ந்து அவர், அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, 34 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் பணி இந்திய கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

அதேவேளையில், விமான படை அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 15 பெண்கள் உள்பட 105 பேர், பயிற்சி விமானிகளாக இன்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அவர்களில் 2 போர் விமானிகளும் அடங்குவர் என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்