இரட்டை ஆதாய பதவி 116 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களை என்ன செய்யப்போகிறீர்கள்? ஆம் ஆத்மி

பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாய பதவி வகிக்கிறார்கள் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. #OfficeOfProfit #AAP #BJP

Update: 2018-01-23 10:29 GMT

புதுடெல்லி,


இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் 20 பேரது பதவியை பறிக்க கோரிய தேர்தல் கமிஷன் சிபாரிசுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இவ்விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளது. இதேபோன்று அரியானாவிலும் 2015-ல் 4 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பாராளுமன்ற செயலர்களாக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை குறிப்பிட்டு சத்தீஷ்காரிலும் 11 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்திலும் இரட்டை ஆதாய பதவியை வகிக்கும் 116 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தி உள்ளது. மொத்தம் 230 உறுப்பினர்கள் கொண்ட மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதாவின் பலமானது 165 ஆக உள்ளது. 

மத்திய பிரதேச மாநில ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அலோக் அகர்வால் பேசுகையில், “இரட்டை ஆதாய பதவி வகிக்கும் விவகாரம் தொடர்பாக 116 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக நாங்கள் புகார் கூறினோம். இதுவரையில் ஒன்றும் நடக்கவில்லை. புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ள கவர்னர் ஆனந்திபென் படேலிடம் இதுதொடர்பாக புகார் தெரிவிப்போம். பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாய பதவியை வகித்துதான் வருகிறார்கள்.

 இது பாரதீய ஜனதா ஊழலில் ஈடுபடுவதை அனுமதிக்கும் வகையில் ஒருசட்டம் உள்ளது என்பதையும், பாரதீய ஜனதா ஊழல் செய்வதை எதிர்க்கும் ஆம் ஆத்மி தலைவர்களை மிரட்டும் வகையில் மற்றொரு சட்டம் உள்ளது என்பதையும் தெளிவுப்படுத்துகிறது,”என கூறிஉள்ளார். 
இந்திய அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதி சட்டம் 1951-ன் 191 (1) மற்றும் 192 பிரிவுகளின் கீழ் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 116 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்