விவசாயிகள் பெயரில் ரூ.109 கோடி கடன் வாங்கி ஏமாற்றிய சர்க்கரை ஆலை, சிபிஐ விசாரிக்கிறது

விவசாயிகள் பெயரில் ரூ.109 கோடி கடன் வாங்கி சர்க்கரை ஆலை ஏமாற்றியது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்கிறது. #OBCfraud

Update: 2018-02-26 12:18 GMT
லக்னோ,

நாட்டின் 2-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக திகழும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மோசடி நடந்தது தொடர்பான தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை அளித்தது. 

இதே போன்று டெல்லியை சேர்ந்த தங்க மற்றும் வைர நகை வியாபாரியான துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் நிறுவனம் ஒரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 389.85 கோடி ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது, இதுதொடர்பாகவும் சிபிஐ விசாரிக்கிறது.

இப்போது மூன்றாவது வங்கி மோசடியாக, விவசாயிகள் பெயரில் ரூ. 109 கோடி கடன் வாங்கி , சர்க்கரை ஆலை நிறுவனம் ஏமாற்றியது தெரியவந்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சிம்பாஹோலி சர்க்கரை ஆலை நிறுவனம் 2011-ம் ஆண்டு 5,762 கரும்பு விவசாயிகளுக்கு கடன் வழங்க போவதாக கூறி ஓரியண்டல் பாங்க் காமர்ஸ் வங்கியில் இருந்து ரூ. 148.60 கோடி ரூபாயை கடன் வாங்கியது. விவசாயிகள் பெயரை சொல்லி கடன் வாங்கிய நிறுவனம் அவர்களுக்கு அதனை கொடுக்கவில்லை என்பது தெரியவந்து உள்ளது. மாறாக வங்கியில் வாங்கிய பணத்தை சர்க்கரை ஆலை, ஆலையின் வளர்ச்சிக்காக பயன்படுத்தி உள்ளது. வங்கியில் வாங்கிய பணத்தையும் திருப்பி செலுத்தவில்லை. 

வாங்கிய கடனில் 109 கோடி ரூபாயை திருப்பி செலுத்தவில்லை, இதனை வங்கி நிர்வாகம் 2015- ம் ஆண்டு வராக்கடனாக அறிவித்தது.

இவ்விவகாரம் வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இப்போது வங்கி மோசடி வழக்கில் சிக்கி உள்ள சிம்பாஹோலி சர்க்கரை ஆலையின் இயக்குநர்களில் ஒருவர் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் என தெரியவந்து உள்ளது. குர்பால் சிங் உட்பட 11 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.

மேலும் செய்திகள்