வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆதார் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-03-14 00:15 GMT
புதுடெல்லி, 

ஆதார் என்னும் அடையாள அட்டை எண், அரசு சேவைகளுக்கும், சமூக நல திட்டங்களுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இப்படி ஆதார் எண்களை இணைப்பதால், தனிநபர் பற்றிய ரகசியம் கசிய வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் ஆதாரை கட்டாயம் ஆக்கும் சட்டமும், பயோமெட்ரிக் முறையும் அரசியல் சாசனப்படி செல்லுபடி ஆகாது என அறிவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, முக்கிய சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை இந்த மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த 7-ந் தேதி விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்குகளில் வரும் 31-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்குவது சாத்தியம் இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.

வங்கி கணக்குகள், பங்குச்சந்தை போன்ற நிதி சார்ந்த நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதால் கடைசி நிமிடத்தில் ஆதார் இணைப்பு தேதியை நீட்டித்தால், அது பெரும் பிரச்சினைக்கு வழி வகுத்து விடும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கிடையே இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஆதார் எண் இணைப்பு குறைபாடுகள் காரணமாக சமூக நலத்திட்ட சலுகைகளை பெற முடியாமல் பலர் பட்டினியால் இறந்து உள்ளதாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கர்நாடக ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி கோரியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆதார் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரையில், வங்கி கணக்கு களுடனும், செல்போன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்