நே‌ஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் நிறுவனம் ரூ.10 கோடி செலுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

நே‌ஷனல் ஹெரால்டு வழக்கில் ‘யங் இந்தியன்’ நிறுவனம் ரூ. 10 கோடி செலுத்த வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #NationalHeraldCase

Update: 2018-03-19 12:25 GMT

புதுடெல்லி, 


நாட்டின் சுதந்திர போராட்டத்தின்போது ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்டது, ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகை. கடன் சுமை, நிதி நெருக்கடி காரணமாக இந்த பத்திரிகை 2008–ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த பத்திரிகைக்கு சொந்தமான பல்லாயிரம் கோடி சொத்துக்களை அபகரிப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் திட்டம் தீட்டி, ‘யெங் இந்தியா’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வாங்கியதாக சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

 2010–ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல் காந்தி ஆகியோர் ரூ.50 லட்சம் முதலீட்டில் ‘யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்‘ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், இருவரும் தலா 38 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

இந்த நிறுவனம், நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டர் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கிவிட்டது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகாரின்பேரில், வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில், சோனியா, ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் 2011-12 நிதியாண்டில் ரூ.249 கோடியே 15 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டும் என்றது. இதை எதிர்த்து யங் இந்தியன் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ரூ.10 கோடி செலுத்துமாறு யங் இந்தியன் நிறுவனத்துக்கு நேற்று உத்தரவிட்டது. பாதிப்பணத்தை 31–ந் தேதிக்குள்ளும், மீதிப்பணத்தை அடுத்த மாதம் 15–ந் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும் என்று கூறியது. ரூ.10 கோடியை செலுத்துவதை பொறுத்து, ரூ.249 கோடியை செலுத்த வருமான வரித்துறை வற்புறுத்தாது என்று நீதிபதிகள் கூறினர். யங் இந்தியன் நிறுவனம் தாக்கல் செய்த மனு தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்டு, அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தது.

மேலும் செய்திகள்