அமளி காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரை முன் கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டம் ?

அமளி காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரை முன் கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2018-03-21 06:11 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2–வது கட்ட அமர்வு 5–ந் தேதி தொடங்கியது. காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அமளியால் தொடர்ந்து குறிப்படும்படி எந்த  அலுவல்களும் நடைபெறாமல் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், அவையில் தொடர்ந்து அமளி நீடிப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்கும் சூழ்நிலை தற்போது அவையில் இல்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறிவிட்டார்.

இந்த நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில், தெலுங்கு தேசம் கட்சி  எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

உறுப்பினர்கள் அமளியால் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து வீணடிக்கப்பட்டு வரும் நிலையில், கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்