கர்நாடக சட்டசபை தேர்தல் சமூகவலைத்தளங்களில் ‘ஆட்சி’ செய்யும் அரசியல் கட்சிகள்

கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றுவதில் அரசியல் கட்சிகள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. #KarnatakaElections2018

Update: 2018-03-22 12:58 GMT


 கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலை ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு கவுரவ பிரச்சினையாக பார்க்க தொடங்கி உள்ளன. எனவே தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றுவதில் அரசியல் கட்சிகள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. 

தேர்தல் ஆணையத்தின் தகவல்படி இந்தமுறை மாநிலம் முழுவதும் 4.96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் ஒரு லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர மொத்த வாக்காளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் 40 வயதிற்கு உட்பட்ட இளம்வாக்காளர்கள் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது. எனவே அரசியல் கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இந்த இளைய தலைமுறையினர் உருவெடுத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ள அரசியல் கட்சிகள் இளம் வாக்காளர்களை கவர முகநூல் (பேஸ்புக்), டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்து வருகின்றன. இந்த பிரசாரங்களில் கட்சிகளை சேர்ந்தவர்கள் இடையேயான சூடான விவாதங்கள், அரசியல் களம், களைக்கட்ட தொடங்கிவிட்டன.

கர்நாடகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 3.5 கோடி பேர் ‘ஸ்மார்ட் போனை‘ பயன்படுத்துவதாகவும், அதில் 3 கோடி பேர் இணையதளத்தை பயன்படுத்துவதாகவும் தனியார் நிறுவனத்தின் சர்வே தெரிவிக்கிறது. இதனால் தான் அரசியல் கட்சிகள் இதுபோன்ற பிரசாரத்தை முன்னெடுக்க காரணம் என கூறப்படுகிறது. மாநிலத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த பிரசாரத்தை முதன்முதலில் பா.ஜனதா கட்சி தொடங்கியது. இதற்காக பெங்களூரு கன்னிகாம்ரோடு பகுதியில் தனி அலுவலகத்தை அமைத்த பா.ஜனதா கட்சி வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற பிரசாரங்களுக்கு இளைஞர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் முறையே பெங்களூரு மல்லேசுவரம், சேஷாத்திரிபுரம் ஆகிய பகுதிகளில் வலைத்தள பிரசாரத்திற்காக தனி அலுவலகத்தை அமைத்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சமூக வலைத்தள பிரசாரத்தை முதன்முதலில் தொடங்கிய பா.ஜனதா கட்சி சார்பில் இதுவரை சுமார் 23 ஆயிரம் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி உள்ளது தெரியவந்து உள்ளது. இதேபோல் ஜனதாதளம்(எஸ்) சார்பில் 3,000 வாட்ஸ்-அப் குழுக்களையும், காங்கிரஸ் கட்சியினர் தொடங்கி உள்ள வாட்ஸ்-அப் பிரசார குழுவில் இதுவரை 12 லட்சம் பேர் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமூகவலைத்தள தேர்தல் பிரசாரம் குறித்து ஜனதாதளம்(எஸ்) கட்சியின் சமூக வலைத்தள பிரிவுக்கான செயல் தலைவர் சோமசேகர் கூறும்போது, கட்சியின் கொள்கைகள், முந்தைய சாதனைகள் குறித்து இளைஞர் மத்தியில் சுலபமாக கொண்டு செல்ல முடிகிறது. ஆனால் வெற்றியை குறிக்கோளாக வைத்து செய்து வரும் சில தவறான வலைத்தள பிரசாரங்களால் சில இடங்களில் இரு கட்சிகளில் உள்ள தொண்டர்கள் மத்தியில் மோதல்களும் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார். சுவர் விளம்பரம், துண்டு பிரசுரங்கள் மூலம் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்த காலங்கள் மாறி தற்போது சமூக வலைத்தளங்களை தங்களது பிரசார களமாக அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் காலம் உருவாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்