தனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவரை 4 கி.மீ தூரம் காரில் தொங்கவிட்டு கொண்டுச் சென்ற அரசு அதிகாரி மீது புகார்
தனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவரை 4 கி.மீ தூரம் காரில் தொங்கவிட்டு கொண்டு சென்ற அரசு அதிகாரி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.;
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம் நகர். இங்கு ஊரக மேம்பாட்டுத்துறை அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்துக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலர், புதன்கிழமை வந்தனர். தங்கள் கிராமத்தில் கழிவறை கட்டுவதற்கான இரண்டாம் கட்ட பணத்தை ஒதுக்கும்படி அவர்கள் கூறினார். இதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரியான பங்கஜ் குமார் கவுதம் அப்போது அலுவலகத்தில் இருந்தார். அவர் இந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை.
பின்னர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த கவுதம், தூரத்தில் நின்ற தனது காரை நோக்கிச் சென்றார். காரில் ஏறி உட்கார்ந்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் காரை மறித்தனர். ஆனால், டிரைவர் காரை இயக்கினார். அப்போது சிலர் காரின் முன் பக்கம் ஏறினர். கார் வேகமாகக் கிளம்பியதும் சிலர் குதித்தனர். பிரிஜ் பால் என்பவர் மட்டும் முன்பக்கத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்றார். அதோடு கார் வேகமாகக் கிளம்பியது.
இந்த மாதிரியான ஆட்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று காரை டிரைவர் நிறுத்தாமல் 4 கிமீ தூரம் சென்றார். இதற்கிடையில் காரின் முன் பக்கம் ஒற்றைக் கையில் தொங்கிக்கொண்டே போலீசுக்கு புகார் செய்கிறார் பிரிஜ் பால். ஆனால் லைன் கிடைக்கவில்லை. டிராபிக் ஜாம் காரணமாக அதிகாரியின் கார் நின்றதும் அதில் இருந்து குதித்து பிரிஜ்பால் சென்றார். அப்போது அதிகாரியை அவர் எச்சரிப்பது போல் செய்கை செய்கிறார். இதையடுத்து அரசு அதிகாரியும் பிரிஜ்பாலும் தனித் தனியாக புகார் அளித்துள்ளனர்.