ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட வருமான வரி ஆணையாளர் கைது
போலி கம்பெனி விவகாரத்தில் சிக்கிய ஒரு தொழில் அதிபருக்கு சாதகமாக செயல்படுவதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட வருமான வரி ஆணையாளர் கைது செய்யப்பட்டார்.;
புதுடெல்லி,
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் வருமான வரித்துறை ஆணையாளராக இருப்பவர் ஸ்வேதாப் சுமன். இவர், போலி கம்பெனி விவகாரத்தில் சிக்கிய ஒரு தொழில் அதிபருக்கு சாதகமாக செயல்படுவதற்காக, அவரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டார். ஒரு இடைத்தரகரிடம் பணத்தை அளிக்குமாறும் கூறினார்.
இதுபற்றி சி.பி.ஐ.யிடம் அந்த தொழில் அதிபர் புகார் செய்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் போட்டுக்கொடுத்த திட்டப்படி, அந்த இடைத்தரகரிடம் தொழில் அதிபர் ரூ.50 லட்சத்தை கொடுத்தபோது, இடைத்தரகரை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
பிறகு, வருமான வரி ஆணையாளர் ஸ்வேதாப் சுமனை கைது செய்தனர். கவுகாத்தி, நொய்டா, டெல்லி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.