கர்நாடக தேர்தலுக்காக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இடையே ரகசிய ஒப்பந்தம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Update: 2018-05-05 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் அனல்பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3-வது முறையாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

துமகூருவில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

நாட்டை இதுவரை ஆண்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரத்தில் மட்டுமே ஏழைகளை பற்றி பேசி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றதும் ஏழைகளின் கண்களில் மண்ணை தூவுவதே காங்கிரஸ் வழக்கமாக வைத்துள்ளது. ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் (மோடி) பிரதமர் ஆனபின்பு, அந்த நிலை மாறியுள்ளது. இதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

கர்நாடக தேர்தலுக்காக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளன. பெங்களூரு மாநகராட்சியில் அந்த கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்று 2 கட்சிகளும் நாடகமாடுகின்றன. இரு கட்சிகளின் இந்த ரகசிய ஒப்பந்தம் குறித்து மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பின்னர் கதக்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது மோடி கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துவிடும். இந்த தேர்தலுக்குப்பிறகு, இந்திய தேசிய காங்கிரசாக (ஐ.என்.சி.) இருக்கும் அந்த கட்சி ‘பஞ்சாப், புதுச்சேரி, பரிவார்-குடும்பம்’ காங்கிரசாக (பி.பி.பி. காங்கிரஸ்) மாறிவிடும்.

சித்தராமையா அரசு ஊழல் தொட்டியாக மாறியுள்ளது. ஏனென்றால் அவர்களின் தலைவர்களும், மந்திரிகளும் ஊழலால் தொட்டி செய்துள்ளனர். மக்களிடம் கொள்ளையடிக்கும் பணத்தின் ஒரு பகுதியை அவர்கள் எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை இந்த தொட்டியில் போடுகின்றனர்.

இந்த தொட்டியில் இருந்து டெல்லிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் ஊழல் பணம் நேரடியாக டெல்லிக்கு செல்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை கொள்ளையடிக்குமே தவிர, மக்களுக்கு எதுவும் செய்யாது. எனவே கர்நாடகத்தின் நல்ல எதிர்காலத்துக்காக காங்கிரஸ் கட்சியை வாக்காளர்கள் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 

மேலும் செய்திகள்