எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் தொடங்கியது: இரட்டை இலை சின்னம் வழக்கு 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

Update: 2018-05-16 23:45 GMT

புதுடெல்லி,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் தொடங்கியது. அவர்களின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தின் போது கூறியதாவது:–

அ.தி.மு.க.வில் முறையாக பொதுக்குழு கூட்டப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவின் அடிப்படையில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. இதனையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

குறிப்பாக 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் 1741 பேர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுமார் 10 சதவிகிதம் மட்டுமே எதிராக வாக்களித்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் செய்யப்பட்டது.

எனவே, காரண காரியங்களை ஆராய்ந்து பெரும்பான்மை அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்கி உள்ளது.

தேர்தல் ஆணையத்தில் இந்த வழக்கு நடைபெற்ற போது சசிகலா தரப்பினர், ‘பெரும்பான்மை அடிப்படையிலேயே இந்த வழக்கை அணுக வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துவிட்டு, தற்போது அதனை எதிர்த்து வாதாடுவது எந்த வகையில் நியாயம்?

மேலும் தேர்தல் கமி‌ஷனில் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால் 90 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது இதுபோன்ற குறுக்கு விசாரணையால் என்ன பயன் இருக்க முடியும்?

இவ்வாறு முகுல் ரோத்தகி வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை 21–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்