அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதி எவ்வளவு?

அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியில் பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் ரூ.711 கோடி வழங்கினர்.

Update: 2018-05-30 23:15 GMT
புதுடெல்லி,

அரசியல் கட்சிகளுக்கு நிதியை அள்ளித்தருவதில் ஒரு பக்கம் பல்துறை பிரபலங்களும், தொழில் நிறுவனங்களும் போட்டி போடுகின்றனர். மற்றொரு பக்கம் அநாமதேயமாக (பெயர் முகவரி குறிப்பிட விரும்பாதவர்களின்) நிதியும் குவிந்து வருகிறது.

2016-17 நிதி ஆண்டில் நமது நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு வந்து குவிந்த நிதி பற்றி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் புள்ளிவிவரங்களுடன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் இடம் பெற்று உள்ள தகவல்கள் வருமாறு:-

* 7 தேசிய அரசியல் கட்சிகளுக்கு அநாமதேயமாக (பெயர் முகவரி குறிப்பிட விரும்பாதவர்களின்) வந்து குவிந்த நிதி ரூ.710 கோடியே 80 லட்சம் ஆகும். (மொத்தம் வந்த நிதியில் இது 45.59 சதவீதம் ஆகும்).

* மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டும் அநாமதேய வரவு ரூ.464 கோடியே 94 லட்சம் ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு இந்த வகையில் கிடைத்த நிதி ரூ.126 கோடியே 12 லட்சம் ஆகும்.

* ரூ.20 ஆயிரமும், அதற்கு மேலும் நன்கொடையாக 7 தேசிய அரசியல் கட்சிகளுக்கு வந்து உள்ள நிதி ரூ.589 கோடியே 38 லட்சம்.

* பாரதீய ஜனதா கட்சிக்கு கிடைத்த மொத்த நிதியின் அளவு ரூ.532 கோடியே 27 லட்சம் ஆகும்.

* பாரதீய ஜனதா கட்சிக்கு வந்து உள்ள நிதியின் அளவானது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு கிடைத்து உள்ளதைவிட 9 மடங்கு அதிகம்.

* பகுஜன் சமாஜ் கட்சி, தனக்கு ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக எந்த நிதியும் வரவில்லை என அறிவித்து உள்ளது.

* 7 தேசிய கட்சிகளுக்கு கிடைத்து உள்ள மொத்த நிதியின் அளவு ரூ.1,559 கோடியே 17 லட்சம் ஆகும்.

* 7 தேசிய கட்சிகளுக்கு சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி உள்ளிட்ட பிறவகை வருமானத்தின் அளவு ரூ.258 கோடியே 99 லட்சம்.

* சத்யா தேர்தல் அறக்கட்டளை பாரதீய ஜனதா கட்சிக்கு அதிகபட்சமாக ரூ.251 கோடியே 22 லட்சமும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.13 கோடியே 90 லட்சமும் நிதி வழங்கி உள்ளது.

மேலும் செய்திகள்