கோவா கடற்கரையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை பாஜக மகளிரணி தலைவி சர்ச்சை கருத்து

கோவா கடற்கரையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு, அரசால் அனைவருக்கும் பாதுகாப்பு தர முடியாது என்று அந்த மாநில பாஜக மகளிரணி தலைவி சுலக்சனா சாவத் கூறி உள்ளார்.

Update: 2018-06-04 07:43 GMT
பனாஜி

தெற்கு கோவா கடற்கரையில் கடந்த 25-ஆம் தேதி 20 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் முன்னிலையில் 3 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து சுலக்சனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது, ஒவ்வொரு தனிநபருக்கும் அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாது. இந்த விஷயத்தில் மக்களின் மனபாங்கை நாம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு தனிநபருமே மற்றவர்களைப் பாதுகாப்பவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

இப்போது நமது நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றம் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் துணிவுடன் முன்வந்து புகார் தெரிவிப்பதுதான் இதற்குக் காரணம் என்றார்.

இதற்கு கோவா மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரீத்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பாஜக மகளிரணித் தலைவர் பொறுப்பற்ற வகையில் பேசியுள்ளார். மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பது அளிப்பது அரசின் கடமை. மேலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவாவுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் மூலம்தான் மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது.

எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் மாநில அரசு உள்ளது.இப்போது பாதிக்கப்பட்ட பெண்ணும், இந்தூரில் இருந்து சுற்றுலாவுக்காக கோவா வந்தவர்தான். தனது கருத்துக்காக சுலக்சனா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்