யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலர் லஞ்சம் கேட்ட விவகாரம்; புகார் கொடுத்தவரை போலீஸ் கைது செய்தது

யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலர் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் புகார் கொடுத்தவரை போலீஸ் கைது செய்துள்ளது. #BribeDemand #BJP #YogiAdityanath

Update: 2018-06-08 12:07 GMT


உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலராக இருப்பவர் ஷாஷி பிரகாஷ் கோயல் மீது அபிசேக் குப்தா என்பவர் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். பெட்ரோல் பங்க் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அதற்கு ரூ.25 லட்சம் கேட்டதாக முதன்மை செயலர் மீது குற்றம் சுமத்தி அபிசேக் குப்தா கவர்னருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பினார். இதனையடுத்து யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதிய கவர்னர் ராம்நாயக், புகார் குறித்து விசாரணை நடத்தி, புகாருக்கு முகாந்திரம் இருந்தால் முதன்மை செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். கவர்னர் எழுதியுள்ள கடிதம் வெளியாகி மீடியாக்களில் பேசப்பட்டது. இச்சம்பவம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலர் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் புகார் கொடுத்த அபிசேக் குப்தாவை போலீஸ் கைது செய்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அபிஷேக் குப்தா செய்தியாளர்களிடம் பேசவிருந்த நிலையில் அவரை போலீஸ் கைது செய்து உள்ளது. அபிசேக் குப்தாவிடம் போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறது. அபிசேக் குப்தா சட்டவிரோதமாக பணிகளை மேற்கொள்ள பா.ஜனதா தலைவர்களின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி பா.ஜனதா தொண்டர்கள் ஹாஸ்ராகாஞ்ச் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் அபிசேக் குப்தாவை கைது செய்து உள்ளது. இவ்விவகாரம் உ.பி. அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தி உள்ளது.

“ஊழலை வெளியே கொண்டுவந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார், ஆனால் முதன்மை செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இருவருக்கு ஏன் இந்த சட்ட வேறுபாடு?” என கேள்வி எழுப்பி உள்ளார் அகிலேஷ் யாதவ்.

மேலும் செய்திகள்