டெல்லியில் மீண்டும் புழுதிப்புயலுடன் கனமழை

டெல்லியில் மீண்டும் புழுதிப்புயலுடன் கனமழை பெய்ததால் நகரம் முழுவதும் ஸ்தம்பித்தது.

Update: 2018-06-09 22:30 GMT
புதுடெல்லி,

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த மாதம் பலமுறை புழுதிப்புயல் வீசி பெருத்த சேதத்தை விளைவித்தது. அத்துடன் கனமழையும் கொட்டியதால் மக்கள் பெரும் அவதியுற்றனர். ஆனால் கடந்த சில வாரங்களாக டெல்லியில் கடுமையான வெயில் அடித்தது. அத்துடன் அனல் காற்றும் வீசியதால் அங்கு குறைந்தபட்ச வெப்பநிலையே 30 டிகிரிக்கும் மேல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென மீண்டும் புழுதிப்புயல் டெல்லியை தாக்கியது. அத்துடன் பலத்த மழையும் கொட்டியது. இதனால் தலைநகரில் வெப்பம் சற்று தணிந்தது. இந்த புழுதிப்புயல் மற்றும் மழையால் சேதம் எதுவும் விளைந்தது குறித்து தகவல் இல்லை. எனினும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழையும், சாரலும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென புயல் வீசி, மழை பெய்து வெப்பம் தணிந்ததால் டெல்லிவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்