அசாமில் பயங்கரம்: 2 வாலிபர்கள் அடித்துக்கொலை, குழந்தை கடத்தல்காரர்கள் என கிராமவாசிகள் வெறிச்செயல்

அசாமில் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து கிராமவாசிகள் 2 வாலிபர்களை அடித்துக்கொலை செய்துள்ளனர்.

Update: 2018-06-09 23:00 GMT
கவுகாத்தி, 

அசாம் மாநிலம், கவுகாத்தியை சேர்ந்த வாலிபர்களான நிலோத்பால் தாஸ், அபிஜித் நாத் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அங்கு காங்திலாங்சோ பகுதியில் உள்ள அருவிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சென்று ஆனந்தமாக குளித்து விட்டு அவர்கள் ஒரு காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர்.

வழியில் பஞ்ஜூரி கிராமத்தில் இரவு 10 மணிக்கு ஒரு மிகப்பெரிய கும்பல், அவர்களை வழிமறித்தனர். குழந்தைகளை கடத்தி செல்கிறவர்கள் என தவறாக கருதி, அவர்களை காரில் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக அடித்துக்கொன்றனர்.

“நாங்கள் குழந்தை கடத்தல்காரர்கள் இல்லை, எங்களை விட்டு விடுங்கள்” என்று அவர்கள் தங்களை தாக்கிய கிராமவாசிகளிடம் கதறும் வீடியோ காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்து உள்ளது. அது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியதுடன், உள்ளூர் டி.வி.யிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். எஞ்சியவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. முகேஷ் அகர்வால் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்