ஸ்ரீநகரில் நடந்த கல்வீச்சில் பலியான சென்னை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: காஷ்மீர் சுற்றுலா இயக்குனர் நேரில் வழங்கினார்

ஸ்ரீநகரில் நடந்த கல்வீச்சில் பலியான சென்னை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையை காஷ்மீர் சுற்றுலா இயக்குனர் நேரில் வழங்கினார்

Update: 2018-06-10 22:45 GMT
ஸ்ரீநகர், 

சென்னை ஆவடியை அடுத்த பாலவேடு பகுதியை சேர்ந்த ராஜவேல் என்பவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கடந்த மாதம் 4-ந் தேதி டெல்லி, காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார். இவர்கள் 7-ந் தேதி ஸ்ரீநகர் அருகே உள்ள நர்பால் பகுதிக்கு சென்ற போது, அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பாதுகாப்பு படையினர் மீதும், சாலையில் சென்ற வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் ராஜவேல் உள்ளிட்டவர்கள் சென்ற பஸ்சும் சிக்கியது. சரமாரியாக நடந்த இந்த கல்வீச்சில் ராஜவேலின் மகன் திருமணி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்புக்கு மாநில முதல்-மந்திரி மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.இந்த நிலையில் உயிரிழந்த திருமணி செல்வத்தின் குடும்பத்துக்கு காஷ்மீர் மாநில அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளது. இதற்கான காசோலையை மாநில சுற்றுலா இயக்குனர் மகமூத் ஏ.ஷா நேற்று சென்னையில் திருமணியின் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்.

சேப்பாக்கம் பிரஸ் கிளப்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மகமூத், திருமணியின் உயிரிழப்புக்கு ஒவ்வொரு காஷ்மீரியும் வருத்தம் தெரிவித்ததாகவும், காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்